குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ க்கள் அடுத்தடுத்து பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 19 அன்று நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ க்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ க்களான அக்ஷய் படேல் மற்றும் ஜிது சவுத்ரி ஆகியோர் புதன்கிழமை மாலை தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது, மோர்பி தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரிஜேஷ் மெர்ஜாவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தப் பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி ஏற்றுக்கொண்டதாக சட்டமன்ற செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரிஜேஷ், கடந்த மூன்று நாட்களில் பதவி விலகிய மூன்றாவது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராவார். ஜூன் 19 அன்று குஜராத்தில் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்கள் அடுத்தடுத்து பதவி விலகுவது அம்மாநில காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் முதல் இதுவரை குஜராத்தில் எட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.