கரோனா தடுப்புக்கு நிதி திரட்டும் நோக்கில் பிரதமர் மோடி, பிஎம் கேர்ஸ் என்ற நிதியத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கினார். ஏற்கனவே பிரதமரின் நிவாரண நிதியம் இருக்கும்போது, இந்த புதிய நிதியம் எதற்கு என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. மேலும் இந்த பிஎம் கேர்ஸ் நிதியை பொதுக்கணக்கு குழுவால் தணிக்கை செய்யமுடியாது என கூறப்பட்டது. பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்தநிலையில் பிஎம் கேர்ஸ் இணையப்பக்கத்தில், அதன் தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி 2020 ஆம் நிதியாண்டில் பிஎம் கேர்ஸுக்கு 3,077 கோடி நிதி நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் நிதியாண்டில் 7 ஆயிரத்து 679 கோடி நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் மார்ச் 27, 2020 முதல் மார்ச் 31, 2021 வரை 10 ஆயிரத்து 990 கோடி நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. இதில் 495 கோடி வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளது. மேலும் கடந்தாண்டு மார்ச் 2021 வரை பிஎம் கேர்ஸ் நிதியத்திலிருந்த 10 ஆயிரத்து 990 கோடியில், 3ஆயிரத்து 976 கோடி மட்டும் செலவழிக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரத்து 14 கோடி செலவழிக்கப்படாமல் இருந்துள்ளது. அதாவது சுமார் 64 சதவீத நிதி பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது.
செலவழிக்கப்பட்ட 3ஆயிரத்து 976 கோடியில், 6.6 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்களை வாங்க 1,392 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. 50,000 'மேட் இன் இந்தியா' வென்டிலேட்டர்களை வாங்க ரூ.1,311 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவிட் தடுப்பூசிகளை பரிசோதிக்கும் அரசு நடத்தும் ஆய்வகங்களை மேம்படுத்த 20.41 கோடி செலவிடப்பட்டுள்ளது. பீகாரின் முசாபர்பூர் மற்றும் பாட்னாவில் 2 கரோனா மருத்துவமனைகள் அமைக்க 50 கோடி செலவிடப்பட்டுள்ளது.