விலங்குகள் சரணாலயத்தில் மனித விலங்குகள்?
பாஜக ஆட்சி செய்யும் ஹரியானா மாநிலத்தில் உள்ள விலங்குகள் சரணாலயத்துக்கு சென்ற மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஒரு கும்பல் அவர்களுடன் இருந்த மாணவியின் உடைகளை கிழித்து அவமானப்படுத்தியுள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் செயின்ட் ஸ்டீபன் கல்லூரிகளைச் சேர்ந்த 6 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி பரீதாபாத்தில் உள்ள அசோலா விலங்குகள் சரணாலயத்துக்கு சென்றுள்ளனர். இரவு 9 மணி வாக்கில் அவர்கள் திரும்பும்போது, அவர்களை ஒரு கும்பல் இடைமறித்துள்ளது.
அவர்கள் யார் அவர்களுக்கும் அந்த மாணவிக்கும் என்ன உறவு என்று அசிங்கமாக கேட்டு அடித்துள்ளது. மாணவர்களில் தாடிவைத்த ஒருவரை, நீ முஸ்லிமா என்றும், மாடு திருட வந்தாயா என்றும் கேட்டு தாக்கியுள்ளது. அவர்களைத் தடுக்க முயன்றபோது மாணவியின் உடைகளை கிழித்துள்ளது.
இதுதொடர்பாக சூரஜ்குண்டு காவல்நிலையத்தில் புகார் செய்ய சென்றபோது, அங்குள்ள போலீஸ்காரர்கள் புகாரைப் பதிவு செய்வதற்கு பதிலாக மன்னிப்புக் கடிதம் எழுதித் தரும்படி கேட்டுள்ளனர். மாணவியின் கிழிந்த உடைகளைப் பார்த்தும் அவர்கள் கேலி பேசியுள்ளனர்.
பிறகு அவர்கள், டெல்லி திரும்பி போலிஸில் புகார் செய்தனர். அவர்கள், ஜீரோ எப்ஐஆர் என்ற பிரிவில் புகாரை பதிவுசெய்து சூர்ஜ்குண்டு போலீஸுக்கு அனுப்பியுள்ளனர்.