சந்திரயான் 2 விண்கலம் (CHANDRAYAAN 2 SATELITE LAUNCH) திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் நாளை தொடங்குகிறது. இதற்கு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், சந்திரயான் 2 விண்கலத்தை திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில் விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாகக் கூறினார்.
சந்திரயான்- 2 விண்கலம் இரண்டு மாதத்தில் நிலவின் தென் துருவத்தை ஆராயும் எனவும், விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2022-க்குள் நிறைவேற்றப்பட உள்ளது என தெரிவித்தார். மழை பெய்தாலும் விண்கலம் ஏவப்படுவதில் எந்த வித பாதிப்பும் இருக்காது எனவும், மழையால் பாதிக்காத வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சந்திரயான்- 2 விண்கலமானது விண்வெளித் துறையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இருக்கும் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக இன்று மாலை ஆந்திர மாநிலம் செல்கிறார். நாளை அதிகாலை திருமலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்கிறார். அதன் பிறகு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் குடியரசுத்தலைவர் சந்திரயான் 2 விண்கலம் குறித்து இஸ்ரோ வல்லுனர்களுடன் ஆலோசனை செய்கிறார். அதே போல் துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு சென்னையில் உள்ள நிலையில், குடியரசுத்தலைவருடன், இவரும் ஆந்திர மாநிலம் செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.