ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி வரலாறு காணாத தோல்வியை தழுவியது. அந்த மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றியை பெற்றது. இதையடுத்து தெலுங்குதேசம் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக தெலுங்கு தேச கட்சியின் மொத்தம் உள்ள ஆறு ராஜ்ய சபா எம்.பி.க்களில் 3 எம்பிக்கள் நேற்று டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து தங்களை பாஜகவில் இணைத்து கொண்டனர். இதனால் தெலுங்கு தேசம் கட்சி வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் குடும்பத்துடன் சுற்றுலா பயணம் சென்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு இந்த கட்சித் தாவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசியல் திருப்பங்கள் தொடர்பாக சந்திரபாபு நாயுடு அடுத்தடுத்து ட்வீட் செய்து வருகிறார். அந்த ட்வீட் பதிவில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் தான் பாஜகவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆந்திராவின் எதிர்காலத்துக்கும் பல கோடி ஆந்திரா மக்களுக்கும் துரோகம் செய்து விட்டு பாஜகவுடன் நட்பு பாராட்டுவது என்பது எனக்கு எளிதானது தான். ஆனால் நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன்.
மக்களுக்கு எது நல்லதோ அதை மட்டுமே நான் செய்து வருகிறேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதையே செய்வேன். ஆந்திரா மக்களின் உரிமைகளுக்கு நான் போராடியதன் விளைவாக தெலுங்குதேச எம்.பி.க்கள் கட்சி தாவியுள்ளனர். ஏனெனில் அவர்கள் தங்களது சொந்த பிரச்சினைகளுக்காகத் தான் பாஜகவுக்கு மாறியுள்ளனர். லட்சக்கணக்கான தொண்டர்கள், கோடிக்கணக்கான தெலுங்கு மக்கள் எங்களுக்குப் பின்னால் இருக்கின்றனர். வரலாறு மீண்டும் வரும். இதில் கவலைப்பட எதுவுமே இல்லை. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பதிவிட்டுள்ளார்.