கரோனா வைரஸ் பரவல் காரணமாக அடுத்த வாரம் நடைபெற உள்ள ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என மோடி அறிவித்த நிலையில், அமித்ஷாவும் ஹோலி கொண்டாட்டங்களைத் தவிர்த்துள்ளார்.
சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் தற்போது சுமார் 60 நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 92,153 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூழலில், இந்த வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,127 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் புதிதாக 25 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, பொதுமக்கள் பயம் இல்லாமலும், அதேநேரம் கவனத்துடனும் இருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஹோலி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது ட்வீட்டில், "கோவிட் -19 கரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்கும் விதமாக மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, இந்த ஆண்டு எந்த ஹோலி நிகழ்ச்சியில் நான் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன்" என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். மேலும், பாஜக மாநிலத் தலைவர்களுக்கு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா எழுதியுள்ள கடிதத்தில், "கரோனா பரவல் ஆபத்து இருப்பதால் யாரும் ஹோலி கொண்டாட்டத்திற்காக மக்களை ஒரே இடத்தில் திரட்ட வேண்டாம்" என கேட்டுக்கொண்டுள்ளார்.