வரதட்சணை கேட்டு தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக ஃப்ளிப்கார்ட் இணை நிறுவனர் மீது அவரது மனைவி புகாரளித்துள்ளார்.
ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான சச்சின் பன்சால் கடந்த 2008 ஆம் ஆண்டு பிரியா எனும் மருத்துவரை மணமுடித்தார். இந்நிலையில், தனது கணவர் தன்னை அடிப்பதாகவும், உடல்ரீதியாகத் துன்புறுத்துவதாகவும், பிரியா தரப்பில் பெங்களூரு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், தங்களது திருமணத்தின் போதே தனது தந்தை 50 லட்சம் ரூபாய் செலவு செய்தார் எனவும், மேலும், 11 லட்சம் ரூபாயைப் பணமாக சச்சினுக்கு தனது தந்தை கொடுத்தார் எனவும் பிரியா தெரிவித்துள்ளார். இந்த சூழலில் சச்சின் மற்றும் பிரியா இருவரின் பெயரிலும் கூட்டாக இருக்கும் சொத்துகள் முழுவதையும், தனது பெயருக்கு முழுவதுமாக மாற்றச்சொல்லி சச்சின் கொடுமைப்படுத்துவதாகப் பிரியா தெரிவித்துள்ளார்.
இந்த சொத்துகளுக்காகத் தன்னை உடல்ரீதியில் துன்புறுத்தியதோடு தனது சகோதரியையும் துன்புறுத்தினார் எனத் தனது புகாரில் பிரியா தெரிவித்துள்ளார். சச்சின் பன்சால், அவரது தந்தை சத்ப்ரகாஷ் அகர்வால், தாய் கிரண் பன்சால், சகோதரர் நிதின் பன்சால் ஆகியோர் மீது இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம்- 498 ஏ (வரதட்சணை துன்புறுத்தல்), 34 (குற்றவியல் நோக்கம்) மற்றும் வரதட்சணை தடைச் சட்டத்தின் 3 மற்றும் 4 பிரிவுகளின் கீழ் சச்சின் பன்சால் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் சச்சின் பன்சால் இந்த வழக்கில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.