பிரான்ஸில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்று தெரிவித்து உச்ச நீதிமன்றம், விசாரணை கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அமித் ஷா, 'ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் உண்மை வென்றுள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக ராகுல் காந்தியால் மத்திய அரசுக்கு எதிராக பரப்பப்பட்ட தவறான பிரச்சாரத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பு அம்பலப்படுத்தி உள்ளது. மேலும் எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை ராகுல் கூறினார் என்பதை கேட்க விரும்புகிறேன். எந்த தகவலின் அடிப்படையில், யார் கூறியதன் பேரில் இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை கூறினார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
2007ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திடாமல் காங்கிரஸ் அரசு காத்திருந்ததற்கு கமிஷன் தான் காரணம். ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தவறான தகவல்களை அவருக்கு கொடுத்தது யார் எனவும் ராகுல் காந்தி கூற வேண்டும். பிடிபட்ட திருடர்கள் ஒன்று கூடி காவலரையே திருடன் என்ற கூறியதுபோல் இது உள்ளது. ரஃபேல் முறைகேட்டிற்கு ஆதாரம் இருப்பதாக கூறியவர்கள், ஆதாரம் இருந்தால் உச்ச நீதிமன்றத்தில் கொடுத்திருக்கலாமே. ராகுல் காந்தி இனிமேலாவது குழந்தை தனமாக புகார் கூறுவதை நிறுத்த வேண்டும்' என கூறினார்.