லடாக் எல்லையில் நடந்த மோதலில் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊடுருவியதால் கடந்த சில வாரங்களாக லடாக் எல்லைப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த மோதலைத் தடுத்து அமைதியை நிலைநாட்ட இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இந்தச் சூழலில், இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் திங்கள்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இரு நாட்டு உறவில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலில், சீன தரப்பில் உயிரிழப்பு, காயமடைந்தது எனச் சேர்த்து மொத்தமாக 43 வீரர்கள் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சீன ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்திய ராணுவத்தினரின் பதிலடியில் சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதில் சீனாவின் காமாண்டிங் அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.