இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.
அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 13 ஆம் தேதி காணொளி வாயிலாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 'இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் நிராகரித்திருந்தார். மேலும் இந்த கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து களம் காண்கிறது என்று அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா தெரிவித்திருந்தார். மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கீட்டில் இந்தியா கூட்டணியில் சுமுகமான முடிவு எட்டப்படாத காரணத்தால் இந்த முடிவு எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து மம்தாவிடம் தாங்கள் பேசி வருவதாக காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணிகள் சார்பில் நடந்த தொகுதி பங்கீட்டில் சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, “உத்தரப் பிரதேசத்தில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் 11 தொகுதிகளில் காங்கிரஸுடன் சுமுக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெறும். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர், நலனைக் கருத்தில் கொண்டு தேர்தல் வியூகம் வகுக்கப்படும்” என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கம், பீகார், மத்தியப் பிரதேசத்தில் தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிக்கும் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் சுமுகமாக முடிந்துள்ளது இந்தியா கூட்டணிக்கு சற்று ஆறுதலைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.