இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் நால்வர் ஒன்றுகூடி, நீதிபதிகள் பணிநியமனத்தில் மத்திய அரசு தலையிடுவதாக செய்தியாளர்களைச் சந்தித்து பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
நாட்டையே அதிரவைத்த இந்த சம்பவத்திற்குப் பிறகும், மத்திய அரசு இன்னமும் அடங்கவில்லை. கொலீஜியத்தின் பரிந்துரைகள் காற்றில் பறக்கின்றன. அதுவும் முன்பகைகள் இதில் காரணமாகத் தொங்குவதாக குற்றச்சாட்டுகளும் எழுகின்றன.
மத்தியப்பிரதேச மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.சேத், கடந்த ஜூன்.09-ம் தேதியோடு ஓய்வுபெற்றார். அந்தப் பதவிக்கு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியான அகில் அப்துல்ஹமீது குரேஷியை நியமிக்கக் கோரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய கொலீஜியம் சட்டத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை அளித்தது. ஆனால், இந்தப் பரிந்துரையை சட்ட அமைச்சகம் நிறுத்தி வைத்துவிட்டது.
2010-ம் ஆண்டு குஜராத்தின் உள்துறை அமைச்சராக அமித்ஷா இருந்தபோது, சொராபுதீன் என்கவுண்டர் தொடர்பான வழக்கு, குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி அகில் அப்துல்ஹமீது குரேஷி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. அந்த வழக்கில், நீதிபதி குரேஷி பிறப்பித்த உத்தரவை அடுத்து, அமித்ஷா இரண்டு நாட்கள் சிறையில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அதேபோல், அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் இவர் தீர்ப்பு வழங்கியிருக்கிறார். இதனால்தான், குரேஷியின் பதவிஉயர்வு விவகாரத்தில், பழைய கணக்குகளைத் தீர்க்க பழிவாங்குகிறது மத்திய அரசு என்கிற குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
மத்திய சட்ட அமைச்சகத்தின் இந்த செயல்பாட்டை அடுத்து, குஜராத் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கூட்டம்போட்டு, குரேஷியை உடனடியாக மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். கொலீஜியத்தின் பரிந்துரையையே கண்டுகொள்ளாதவர்களுக்கு, தீர்மானமெல்லாம் எந்த மூலையிலோ!