கரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் குரங்கு அம்மை நோய் பரவல் உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வைரஸ் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 ஆம் ஆண்டுமுதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவியது. தற்பொழுது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றில் கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 12 நாடுகளில் 260 க்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளது.
இந்நிலையில் குரங்கு அம்மையை கண்டுபிடிக்கும் பரிசோதனை முறையை இந்தியாவைச் சேர்ந்த டிவிட்ரோன் என்ற மருந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர் முறையில் குரங்கு அம்மையை கண்டறியலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. இருப்பினும் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சமாளிக்கத் தயார் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.