'காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை' விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
காற்று மாசு ஏற்படுவதால் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், எனவே பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குத் தொடர்பாக பட்டாசு வியாபாரிகள், பசுமைப் பட்டாசுகள் வெடிப்பதால் காற்றுமாசு ஏற்படுவதாக நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை என்று விளக்கமளித்திருந்தனர்.
அனைத்துத் தரப்பு விளக்கத்தையும் கேட்ட தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அதில், 'டெல்லி முழுவதும் இன்றிரவு முதல் நவம்பர் 30- ஆம் தேதி வரை பட்டாசுகள் விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. காற்று மாசு அதிகமுள்ள நகரங்களிலும் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. மற்ற இடங்களில் இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ராஜஸ்தான், ஒடிஷா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.