அதிமுக இணைப்பு: மோடியுடன் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆலோசனை?
நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கைய்ய நாயுடு இன்று (ஆக.,11) பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று டெல்லி சென்றுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி சென்றுள்ளதால் தற்போது அதிமுக.,வில் நிலவி வரும் உட்கட்சி விவகாரம் குறித்தும் பேசப்படலாம் எனவும், பிரதமர் முன்னிலையில் அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளன.
பிரதமருடனான சந்திப்பின் போது நீட் தேர்வு விவகாரம், தமிழக மீனவர் பிரச்னை உள்ளிட்டவைகள் குறித்து முதல்வர் பேச உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமரை சந்தித்த பிறகு மாலை 4 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தையும் முதல்வர் பழனிசாமி சந்திக்க உள்ளார். நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.