குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், சாலைகளில் அசைவ உணவுகளை விற்கும் ஸ்டால்களை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவிற்குள்ளும் அசைவ உணவு ஸ்டால்களை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் நகராட்சியின் நகர திட்டமிடல் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இன்றுமுதல் (16.11.2021) அமலுக்கு வருகிறது. அசைவ உணவுகளை விற்கும் ஸ்டால்கள் குறித்து மக்களிடமிருந்து புகார்கள் வந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் நகராட்சியின் நகர திட்டமிடல் குழுவின் தலைவர் தேவாங் டானி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த உத்தரவு குறித்து பேசியுள்ள குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், "இது சைவம், அசைவம் பற்றிய கேள்வி அல்ல. மக்கள் அவர்கள் விரும்புபவற்றை சாப்பிடலாம். ஆனால், ஸ்டால்களில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தீங்கு விளைவிக்கக் கூடாது. ஸ்டால்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக் கூடாது" என கூறியுள்ளார்.
இதற்கிடையே, அகமதாபாத் நகராட்சியின் முடிவுக்கு சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.