வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இனி முதல் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம், டெல்லியில் 200 யூனிட் வரை மட்டுமே மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மின்கட்டணம் கிடையாது என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின்னரும் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த சலுகை சென்றடையாமல் இருந்தது. இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு தற்போது தீர்வு காணும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் கெஜ்ரிவால்.
அதன்படி வாடகைக்கு குடியிருப்போர் ரூ3000 செலுத்தி பிரீபெய்ட் மீட்டர்களை பொருத்திக்கொள்ள அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதில் முதல் 200 யூனிட்கள் வரை கட்டணம் குறையாது, அதன்பின் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இந்த பிரிபெய்டு மீட்டர் பொருத்த வாடகை ஒப்பந்தம் மற்றும் வாடகை ரசீது ஆகியவை தேவை. வீட்டு உரிமையாளரிடம் இருந்து அனுமதி சான்றிதழ் எதுவும் பெற்று வரத்தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.