தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் இன்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது கர்நாடகாவிலும் இதுபோன்ற மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே கர்நாடகாவில் நிலச்சரிவு ஏற்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் உயிரிழந்த நிலையில் இன்று ஹாசன் மாவட்டத்தில் சக்லேஸ்பர் தாலுக்காவில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் கார் லாரி, எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி ஆகியவை சிக்கியுள்ளது. தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மீட்புப் பணிகள் முடிவதற்கு கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆகும் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். பெங்களூர்- மங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.