‘நமது அரசியலமைப்பு கீதை, குரான், பைபிள் போன்றவற்றுக்குக் குறைந்தது இல்லை’ என மக்களைவை எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து இன்று (19.9.2022) முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று புதிய நாடாளுமன்றத்தில் முதல் அமர்வு நடைபெற உள்ளது.
அதே சமயம் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மாநிலங்களவையில் ஒப்புதலையும் பெற்றிருந்தது. இது இன்று நடைபெறும் சிறப்புக் கூட்டத் தொடரில் அமல்படுத்தப்பட்டது. சமீபத்தில் டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டின் ஜனாதிபதி விருந்தில் இந்தியாவிற்குப் பதில் 'பாரத்' என இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து பல எதிர்ப்புக் குரல்களும், ஆதரவுக் குரல்களும் எழுந்தன. ஒருகட்டத்தில் நாட்டின் பெயர் மாற்றப்படும் எனவும் பரவத் தொடங்கியது. ஆனால், ஒன்றிய அமைச்சர் இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் விவாதத்தின் போது பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “நமது அரசியலமைப்பு கீதை, குரான், பைபிள் போன்றவற்றுக்குக் குறைவானதில்லை. மேலும், ‘இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’ இந்தியாவிற்கும் பாரதத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதே இதன் பொருள். எனவே, தேவையில்லாமல் இரண்டுக்கும் விரிசலை ஏற்படுத்த யாரும் முயற்சிக்காமல் இருந்தால் நல்லது” எனப் பேசியுள்ளார்.
மேலும், அவர் “பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு, பிரதமர் ராஜீவ்காந்தியால் கொண்டு வரப்பட்டது. அப்போது முதல், மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தைக் கொண்டு வர காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது. எனவே, இது மக்களவையில் சிலமுறை நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், மாநிலங்களவையில் இந்த முயற்சி தோல்வியடைந்தது. ஆனால், மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த மசோதா இன்னும் செயலில் தான் உள்ளது” என்றார்.