இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்த வகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 100 நாட்களைக் கடந்து இந்தியா முழுவதும் 18 வயது நிரம்பியவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. இதுவரை 21 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவர் ஏ.கே சிங் மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஆய்வில், கோவாக்சினைவிட கோவிஷீல்டு செலுத்தியவர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி உற்பத்தி ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 515 சுகாதாரப் பணியாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த ஆய்வு முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் இதனை மருத்துவர்கள் வழிகாட்டலாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.