Skip to main content

பிரதமர் மோடியை விமர்சித்த நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு!

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
பிரதமர் மோடியை விமர்சித்த நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு!

பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூருவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் விழா நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் படுகொலையை நிகழ்த்தியவர்கள் கைதுசெய்யப்படலாம், இல்லாமலும் போகலாம். ஆனால், அவரது கொலையை சமூக வலைதளங்களில் கொண்டாடுபவர்களை இந்த அரசு என்ன செய்யப்போகிறது. அவர்கள் பிரதமர் மோடியால் ட்விட்டரில் பின் தொடரப்படுபவர்கள். அவர்களைப் பற்றி சிறு கண்டனம் கூட மோடி எழுப்பாமல் இருப்பது வேதனையையும், அச்சுறுத்தல்களையும் ஒருசேர கொடுக்கிறது. அவர் என்னைவிட மிகச்சிறந்த நடிகராக இருக்கவேண்டும் என பேசியிருந்தார்.

இதுகுறித்து கர்நாடக பாஜக சார்பில், நடிகர் பிரகாஷ்ராஜின் பேச்சு முதிர்ச்சியடையாத ஒன்றாக இருக்கிறது. அவர் கூடியிருந்தவர்களின் கைத்தட்டல்களைப் பெறுவதற்காக இதுமாதிரியான கருத்துக்களை வெளியிட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜின் மீது பிரதமர் மோடியை விமர்சித்த காரணத்தை மையமாக வைத்து உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 7ஆம் தேதி விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்