நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என ஏற்கனவே ரிசர்வ் அறிவித்திருந்தது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகும் ரூ.2000 நோட்டை மாற்ற முடியாதவர்கள், அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.20,000 வரை ரூ.2000 நோட்டை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த 19 கிளைகளில் தனிநபரோ, நிறுவனமோ ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டது குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி வரை 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளன. இந்த மதிப்பு மொத்தமுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 97.38 சதவீதம் ஆகும். அதாவது 97.38 சதவீதம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், இன்னும் 9 ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டும் மீதமுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.