இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அந்த மாநிலத்தின் பழங்குடி சமூகத்தினரான குக்கி மற்றும் நாகா இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், கடந்த மே மாதம் 3 ஆம் தேதி முதல் மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த வன்முறைச் சம்பவங்களால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்தியா கூட்டணி சார்பில் எதிர்க்கட்சியினர், கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து இரு அவைகளிலும் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவுவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கடந்த 2 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். இருப்பினும் மணிப்பூரில் கலவரம், துப்பாக்கிச் சூடு, உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் மணிப்பூருக்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் மூலம் சி.ஆர்.பி.எஃப். (CRPF) மற்றும் பி.எஸ்.எஃப். (BSF) பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 900 வீரர்கள் கூடுதலாக அனுப்பப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலம் இம்பால் சென்றடைந்த 900 பாதுகாப்பு வீரர்கள் பதற்றம் நிறைந்த பல்வேறு மாவட்டங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3 ஆம் தேதிக்குப் பின்னர் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து 40 ஆயிரம் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.