திரிபுரா மாநிலத்தில் சிறுமி பயணிகள் ரயிலை விபத்திலிருந்து காப்பாற்றிய சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
திரிபுரா மாநிலம் தான்சேரா பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த 9 வயது ஏழைச் சிறுமி சுமதி. அண்மையில் தான்சேரா பகுதியில் பெய்த மழை காரணமாக அந்த பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் மண் சரிந்து தண்டவாளத்தை முழுவதும் மூடியிருந்தது.
அப்போது இதை அறியாமல் தரம்நகரிலிருந்து தான்சேரா வழியாக அகர்தலாவிற்கு பயணிகள் ரயில் ஒன்று விரைந்து வந்துகொண்டிருந்தது. அப்பகுதியில் தூரத்தில் ரயில் வருவதை அறிந்த அந்த ஒன்பது வயது சிறுமி சுமதி தண்டவாளம் பாதிக்கப்பட்டுள்ளதே ரயில் விபத்து ஏற்பட்டுவிடுமே என்ற பயத்தில் ரயிலை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ரயிலுக்கு முன் சென்று தனது உடையை காட்டி பயணிகள் ரயிலை நிறுத்தியுள்ளார். அந்த சிறுமியின் தீரச்செயலால் விபத்து முன்னரே தடுக்கப்பட்டு ரயிலில் பயணம் செய்த சுமார் 2000 பேரின் உயிர் காப்பற்றப்பட்டுள்ளது. ஒன்பது வயது சிறுமியின் இந்த வீரச்செயலை அறிந்த ரயில்வே நிர்வாகம் ஏழ்மையில் வாடும் அவரின் குடும்பத்திற்காக அவரது தந்தைக்கு பணி வழங்கியுள்ளது. சிறுமியின் இந்த செயலை கேள்விப்பட்ட திரிபுரா சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த சிறுமிக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் ரொக்க பரிசுகள் கொடுத்து பாராட்டி வருகின்றனர்.
அந்த சிறுமியின் இந்த செயலை கேள்விப்பட்ட திரிபுரா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் சுதீப்ராய் பர்மன் அந்த சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து பாராட்டியுள்ளார். முகத்தில் பரிதாபமும், அப்பாவித்தனமும் தொற்றியுள்ள இந்த ஏழை சிறுமி சுமதியின் இந்த தீரச்செயல் அப்பகுதியில் அந்த சிறுமிக்கும் அவரது குடும்பத்திற்கும் பாராட்டை பெற்றுத்தந்துள்ளது.