கரோனா தடுப்பு நடவடிக்கைள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் (12/05/2020) இரவு 08.00 மணிக்குத் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூபாய் 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
கடந்த இரண்டு நாட்களாக தன்னிறைவு இந்தியா திட்டத்தின் கீழ் அம்சங்களை விளக்கும் வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து வந்தார். இந்நிலையில் இன்று மூன்றாம் கட்ட அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.
தன்னிறைவு இந்தியா திட்டத்தின் கீழ் இன்று 11 அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இந்தியாவில் பெரும்பாலானோர் விவசாய துறையை சார்ந்தே உள்ளனர். நம் நாட்டு விவசாயிகளின் அனைத்து சவாலான சூழல் சூழ்நிலைகளிலும் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். இன்று வெளியிடப்படும் 11 அறிவிப்புகளில் 8 அறிவிப்புகள் விவசாய உள்கட்டமைப்பை சார்ந்தவை. விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு இன்று திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.