கௌரி லங்கேஷ் கொலைவழக்கில் வலதுசாரி அமைப்பினர் 5 பேருக்கு தொடர்பு?
மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலைவழக்கில் வலதுசாரி அமைப்பான சனாதன் சான்ஸ்தாவைச் சேர்ந்த ஐந்து பேருக்கு தொடர்பிருப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளரும், மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டு வாசல் முன்பாக செப்டம்பர் 5ஆம் தேதி மர்ம நபர்கள் சிலரால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிக்க கர்நாடக மாநில அரசின் சார்பில் சிறப்புப் புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு வலதுசாரி அமைப்பான சனாதன் சான்ஸ்தாவைச் சேர்ந்த ஐந்து பேருக்கு இந்த கொலை சம்பவத்தில் தொடர்பிருப்பதாக தெரிவித்துள்ளது.
அவர்கள் பிரவீன் லிம்கர், ஜெயபிரகாஷ், சரங் அகோல்கர், ருத்ரா பாட்டில் மற்றும் வினய் பவார். இவர்களுக்கு 2009ஆம் ஆண்டு கோவாவில் உள்ள மட்கோன் பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்கள் படுகொலை செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் நரேந்திர தபோல்கர், பன்சாரே மற்றும் கல்புகர்கி ஆகியோரின் மரணத்திலும் தொடர்புள்ளவர்கள் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி இந்த வாரத்திற்குள் சிறப்புப் புலனாய்வு குழு கௌரி லங்கேஷ் கொலைவழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்த முழு விவரங்களை சேகரித்துவிடும் என தெரிவித்துள்ளார்.