இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வேகமாகப் பரவிவந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கேரளாவில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 42,909 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 380 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாக ஒரேநாளில் பலியாகியுள்ளனர். நோய்த் தொற்றிலிருந்து நேற்று ஒரே நாளில் 34,763 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
நாடு முழுவதும் இதுவரை 3.27 கோடி கரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3.19 கோடி பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 3.83 லட்சம் பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அதேபோன்று உயிரிழப்பு எண்ணிக்கையும் சீராகக் குறைந்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவில் இதுவரை 63.43 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.