அண்மையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று கந்துகுருவில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி கால்வாயில் விழுந்து 8 பேர் உயிரிழந்தனர். இந்நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் சங்கராந்தியை முன்னிட்டு ஏழைப் பெண்களுக்கு கைத்தறி புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சந்திரபாபு நாயுடு சில பெண்களுக்கு புடவைகள் வழங்கினார். பின்னர், அவர் அந்த விழாவில் இருந்து கிளம்பிச் சென்ற பிறகு, அக்கட்சியின் தலைவர்கள் மீதமுள்ள பெண்களுக்கு புடவைகளை வழங்கி வந்தனர். அப்போது, திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும், படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ள இதுபோன்ற சம்பவம், ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.