புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கான எம்.எல்.ஏக்கள், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், 3 நியமன எம்.எல்.ஏக்கள் மாநில அரசின் பரிந்துரையின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுதான் நியமன எம்.எல்.ஏக்களை தேர்ந்தெடுத்து மத்திய உள்துறையின் ஒப்புதலுக்காக அனுப்பும். பிறகு அவர்களுக்குத் துணைநிலை ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.
ஆனால், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மாநில அரசின் பரிந்துரை இன்றி பாஜகவே, அக்கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்களை அதிரடியாக நியமித்தது. அவர்களுக்கு அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாராயணசாமி தலைமையிலான அரசு, பாஜகவின் இந்தப் போக்குக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ‘மாநில அரசின் பரிந்துரை இன்றி நியமிக்கப்பட்ட மூன்று நியமன எம்.எல்.ஏக்களை சட்டசபைக்குள் அனுமதிக்க மாட்டேன்’ என அப்போதைய சபாநாயகர் வைத்திலிங்கம் எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், இவ்விவகாரத்தைப் புதுச்சேரி அரசு உச்ச நீதிமன்றம்வரை கொண்டு சென்றது. ஆனால் உச்ச நீதிமன்றம், ‘மத்திய உள்துறையின் இந்த முடிவு செல்லும்’ என தீர்ப்பளித்தது. அதையடுத்து 3 நியமன எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் நுழைந்தனர். இடையில் நியமன எம்.எல்.ஏக்களில் ஒருவரான சங்கர் இறந்தபோனதும் மற்றொரு பாஜக நிர்வாகியான தங்க. விக்கிரமனுக்கு அப்பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் 15வது புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிடப்பட்டு, என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.
ஆனால் துணை முதல்வர் பதவி, சரிக்கு சமமாக அமைச்சர்கள் பதவி உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ரங்கசாமிக்கு பாஜக நெருக்கடி கொடுத்துவருகிறது. இதனிடையே முதலமைச்சர் ரங்கசாமி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், திடீரென நேற்று (10.05.2021) முன்னாள் காங்கிரஸ் அரசின் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் தம்பியும், பாஜகவைச் சேர்ந்த ராமலிங்கம், திமுகவில் இருந்து பாஜகவுக்குத் தாவிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், பாஜக நகர மாவட்டத் தலைவர் அசோக் பாபு ஆகியோர் நியமன எம்.எல்.ஏக்களாக நியமிக்கப்பட்டு உள்துறை அமைச்சகத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ரங்கசாமிக்கு தெரிவிக்காமலேயே, அமைச்சரவை இன்னும் அமைக்கப்படாத நிலையில், சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாத அதிமுகவுக்கு ஒன்றும், என்.ஆர்.காங்கிரஸ்க்கு ஒன்றும் என கூட்டணிக் கட்சிகளுக்குத் தலா 2 நியமன எம்.எல்.ஏக்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த 3 பேரை தடாலடியாக நியமித்தது கூட்டணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது மத்திய பாஜக அரசு. அதேபோல் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொருளாதார வல்லுநர்கள் என பல்வேறு துறைகளில் சிறப்பு வாய்ந்தவர்களுக்கு நியமன எம்.எல்.ஏக்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று புதுச்சேரி அரசியல் பார்வையாளர்கள் ஒருபக்கம் கோரிக்கை விடுத்துவந்தனர். ஆனால் இவை எவற்றையும் கருத்தில் கொள்ளாமல் மத்திய பாஜக தடாலடியாக அவர்கள் கட்சியைச் சார்ந்த மூவரை நியமித்தது புதுச்சேரி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.