ஆந்திரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதன்காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்குள்ளும் கடந்த வியாழனன்று (18.11.2021) இரவு வெள்ள நீர் சூழ்ந்தது. கோவிலுக்கு வரும் பாதையில் மலைப்பாறைகள் விழுந்தன.
இதனால் நேற்று (19.11.21) ஒருநாள் மட்டும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தற்போது மீண்டும் கோயிலுக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பதி தேவஸ்தானம், கோயிலில் இருக்கும் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது தொடர்பாக தவறான வீடியோக்கள் பரப்பப்படுவதாகவும், அதைப் பக்தர்கள் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தச் சூழலில், ஆந்திராவின் மண்ட்பள்ளே, அகேபாடு மற்றும் நந்தலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில், மூன்று வெவ்வேறு ஆந்திர அரசு பேருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த மூன்று பேருந்துகளிலும் சுமார் 30 பேர் பயணித்திருக்கலாம் என கருதப்படும் நிலையில், இதுவரை வேறு வேறு இடங்களில் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.