உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம்துலார் கோந்த். இவர் சோன்புத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி தொகுதியின் பா.ஜ.க கட்சி சார்பாக எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் மீது கடந்த 2014 ஆம் ஆண்டு, 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவம் நடைபெற்றபோது ராம்துலார் எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகிக்கவில்லை. இதையடுத்து, அவர் பா.ஜ.க சார்பில் துத்தி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் சட்டமன்ற உறுப்பினராக மாறியதை அடுத்து, இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று (14-12-23) நீதிமன்றத்திற்கு வந்தபோது, ராம்துலார் கோந்த் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. எனினும், இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படாமல் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று (15-12-23) நீதிமன்றம் தீர்ப்பை அளித்துள்ளது. அதில், குற்றவாளியான எம்.எல்.ஏ ராம்துலார் கோந்துக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து சோன்பத்ரா நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மேலும், அவர் 2 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத் தண்டனை பெற்றுள்ளதால் மக்கள் பிரதிநிதிகள் சட்டப்படி அவர் தனது எம்.எல்.ஏ பதவியை இழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.