பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் இருக்கும் சூழலில், 28 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சிவான் மற்றும் சரண் மாவட்டங்களில் உள்ள பலர், உள்ளூரில் இருக்கும் கடை ஒன்றில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். பின்பு வீட்டிற்கு சென்ற அவர்களுக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 49 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் தற்போது சிவான் மற்றும் சரண் மாவட்டங்களிலும் மொத்தம் 28 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து பலரும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக இரண்டு ஊராட்சி அதிகாரிகள் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் மாநில அரசு சார்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையில் எப்படி கள்ளச்சாராயம் கிடைத்தது? அரசின் மெத்தனப்போக்கின் காரணமாகவே கள்ளச்சாராய மரணங்கள் நடந்தது என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 60 மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பேசுபொருளான நிலையில் தற்போது பீகாரில் 28 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.