அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டுவரும் நிலையில், அயோத்தி நகரை மேம்படுத்த உத்தரப்பிரதேச அரசு, எல்.இ.ஏ அசோசியேட்ஸ் என்ற சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து திட்டங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில், இந்த அயோத்தி வளர்ச்சி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 26 ஆம் தேதி காணொளி வாயிலாக ஆய்வுசெய்தார்.
இந்நிலையில் அயோத்தி வளர்ச்சி திட்டத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அயோத்தி வளர்ச்சி திட்டத்தின் கீழ், ‘மரியாடா புஷோட்டம் ஸ்ரீராம் சர்வதேச விமான நிலையம்' என்ற பெயரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது. மேலும் உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமும் அமைக்கப்படவுள்ளது.
சரயூ நதிக்கரையில், இராமரின் 14 வருட வன வாசத்தை பல்வேறு வடிவங்களில் சொல்லும் ‘ராம் ஸ்மிருதி வன்’ என்னும் இராமாயண ஆன்மீக வனப்பகுதி ஏற்படுத்தப்படவுள்ளது. சரயூ நதியில் வரும் தீபாவளி முதல் படகு சவாரி தொடங்கப்படவுள்ளது. அதேபோல 1200 ஏக்கரில் வேதநகரம் ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது. இந்த நகரில் ஆசிரமங்களும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும், சுற்றுலாவிற்கு வருபவர்களைத் தங்கவைக்க மாநில மாளிகைகளும், வெளிநாட்டினருக்கான மாளிகைகளும் உருவாகவுள்ளன. 30,000 யாத்திரிகர்கள் தங்கக்கூடிய தர்மசாலாக்கள் சரயூ ஆற்றின் இரு கரைகளிலும் ஏற்படுத்தப்படவுள்ளன. இராமர் கோயிலை பிரதிபலிக்கும் வகையிலான நுழைவுவாயில்கள், அயோத்திக்கு வரும் ஆறு முக்கிய வழிகளில் கட்டப்படவுள்ளன.