திருப்பத்தூர் தொடங்கி, சென்னை, தாராபுரம், சோமசரம்பேட்டை, காவராப்பட்டு முதலிய இடங்களில் தந்தை பெரியார் சிலை அவமதிப்புக்குப் பின்னணியில் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச். ராஜா இருக்கிறார் என்று தெரிந்திருந்தும் காவல்துறை அவரைக் கைது செய்யாதது ஏன்? உடனடியாகக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் திராவிடர் கழகம் அனைத்துக் கட்சியினர் அனைவரையும் இணைத்து போராட்டத்தில் ஈடுபடும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
வேலூர் திருப்பத்தூர் தொடங்கி, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு வருகிறது.
தந்தை பெரியார் பிறந்த நாளிலேயே பகிரங்கமாக பெரியார் சிலைமீது செருப்பு வீச்சு!
குறிப்பாக தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று தலைநகரான சென்னையிலேயே, பகிரங்கமாக தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க பல்வேறு கட்சிகள் கூடியிருந்த தருணத் திலேயே தன்னை வெளிப்படையாக பா.ஜ.க.காரன் என்று சொல்லிக் கொண்ட வக்கீல் ஒருவர் தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசி இருக்கிறார்.
காவல்துறையினர் அந்த ஆசாமியைக் காப்பாற்றா விட்டால் கொந்தளித்தெழுந்த அந்த மக்கள் என்ன செய்திருப்பார்கள் என்பது தெரிந்த செய்தி.
அனைத்துத் தரப்பினரும் கண்டனக் குரல் எழுப்பிய நிலையில், அந்த ஆசாமி என்ற “அம்பு” மட்டுமே குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் தள்ளப்பட்டுள்ளார். ஏவி விட்டவர்கள் வெளியில்!
அதே போல தந்தை பெரியார் பிறந்த நாளில் தாராபுரத்தில் தந்தை பெரியார் சிலையின் தலைமீது செருப்பை வைத்துள்ளனர்.
திராவிடர் கழகத்தினரும், பொது மக்களும் வெகுண் டெழுந்த நிலையில் காவல்துறையினர் சம்பந்தப் பட்டவரைக் கைது செய்துள்ளனர். அவரும் பா.ஜ.க.காரர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
தாராபுரத்திலும் அவமதிப்பு
சென்னையில் பெரியார் சிலையை அவமதித்தவரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறைக்கு அனுப்பிய காவல்துறை, அதே குற்றத்தை தாராபுரத்தில் செய்த ஆசாமி மீது வேறு பிரிவுகளில் வழக்குத் தொடுக்கப்பட்டது ஏன்? நியாயமாக சட்டப்படி அவரையும் ‘குண்டர்’ சட்டத்தில் தானே சிறைக்கு அனுப்பி இருக்க வேண்டும்.
அனைத்துக் கட்சியினரும் இதனைச் சுட்டிக்காட்டி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று நடத்த இருந்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் அழைத்துப் பேசி ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள்; அதற்குள் உரிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேட்டுக் கொண்டதால் கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தள்ளி வைப்பதாக அனைத்துக் கட்சியினரும், வழக்குரைஞர்களும் கூறி வந்துள்ளனர்.
இதற்கிடையில், நேற்றிரவு (23.9.2018 - ஞாயிறு) திருச்சியையடுத்த சோமரசம் பேட்டையில் உள்ள தந்தை பெரியார் சிலையின் கைத்தடி உடைக்கப் பட்டுள்ளது.
உரத்தநாடு அருகே உள்ள காவராப்பட்டு என்னும் ஊரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டுள்ளது.
பின்னணியில் இருப்பது பா.ஜ.க. தேசிய செயலாளர்
எச். ராஜாவே!
தொடர்ந்து தந்தை பெரியார் சிலை அவ மதிக்கப்படுவதைப் பார்க்கும் பொழுது தனிப்பட்ட வகையில் யாரோ இந்த வேலையைச் செய்வதாகக் கருத முடியாது. இதன் பின்னணியில் ஒரு சக்தி இருக்கிறது; அது இந்துத்துவா என்ற பெயரில் மத வெறியை கிளப்பி வரும் சங்பரிவார்களின் வேலை என்பது வெளிப்படை!
குறிப்பாக பா.ஜ.க.வின் தேசிய செயலாளராக இருக்கக் கூடிய எச். ராஜா என்பவர் வெளிப்படையாக இந்தக் கேடு கெட்ட பணிகளின் பின்புலமாக இருந்து வருகிறார்.
திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நிலையில் இந்த ஆசாமி டுவிட்டரில் (6.3.2018) பதிவு செய்ததைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“லெனின் யார், அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? கம்யூனிசத்திற்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு? திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப் பட்டுள்ளது. இன்று லெனின் சிலை - நாளை தமிழகத்தில் ஜாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை; ஈ.வெ.ரா. தமிழகத்தை நாசமாக்கியவர்” என்று இவ்வளவு வெளிப்படையாக வன்முறையைத் தூண்டும் வகையில் எழுதினாரே - அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
கடந்த 16ஆம் தேதி - திருமயத்தில் விநாயகர் ஊர்வலத்தின்போது - என்ன பேசினார்; காவல்துறை இலஞ்சத்துறை என்றும் மற்றும் கேவலமான வார்த்தை களைப் பயன்படுத்திப் பேசினாரே - அத்தோடு நிற்கவில்லை; ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதைபோல நீதிமன்றத்தை மிகக் கீழ்த்தரமான கொச்சையான, ஆபாச வார்த்தைகளால் வார்த்தைகளால் சாடினாரே!
இதன்மீது சென்னை உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக வழக்கொன்றைப் பதிவு செய்துள்ளது. பல ஊர்களிலும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
எட்டுப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளது என்றும், அவரைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டது.
ஆனால் நடந்தது என்ன? இதுவரை அவரைக் கைது செய்யாதது ஏன்? போலீஸ் பாதுகாப்போடு சுற்றித் திரிந்து கொண்டுள்ளாரே - நியாயமா? நீதியா?
காவல்துறைக்கு சவால் விடுக்கும் எச். ராஜா
தமிழ்நாடு அரசை, முதல் அமைச்சரைக் கடுமையாக விமர்சித்ததாகக்கூறி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் உடனடியாகக் கைது செய்யப்படுகிறார் - அதைவிட சட்ட விரோதமாக வன்முறையைத் தூண்டும் விதமாக உயர்நீதிமன்றத்தையே தரக் குறைவாக ஏசிய - பேசிய எச். ராஜாவைக் கைது செய்யாதது ஏன்?
இதிலும் மனுதர்மம் தானா? ஒரு குலத்துக்கொரு நீதி தானா?
மயிலாடுதுறையையடுத்து திருக்கடையூரில் செய்தியாளர்களைச் சந்தித்த (22.9.2018) நேரத்தில் அவர் தெரிவித்துள்ளவை என்ன? காவல் துறையையும், அரசையும் துச்சமாக மதித்துக் ‘காலில் போட்டு மிதிக்கும்’ வகையில் பேசி இருக்கிறாரே!
‘நான் தலைமறைவாக இல்லை. தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கில்லை. என்னைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்று கூறியுள்ளாரே!
பின்னணியில் இருப்பது மாநில அரசா - மத்திய அரசா?
இந்தத் தகவல் வெளி வந்ததற்குப் பிறகும் காவல்துறை கை கட்டி நிற்பது ஏன்? இதன் பின்னணியில் இருப்பது மாநில அரசா? மத்திய அரசா?
பச்சையாக வன்முறைகளைத் தூண்டும் வகையிலும், காவல்துறையையும், நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையிலும் தந்தை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று கூறி, அதன் அடிப்படையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படும் நிலையிலும் இதற்கெல்லாம் தூண்டிய சக்தியாக இருக்கக் கூடிய பா.ஜக..வின் தேசிய செயலாளர் எச். ராஜாவை கைது செய்து சட்டப்படி உரிய தண்டனையை பெற்றுக் கொடுக்காத வரையில், பெரியார் சிலைகள் அவமதிக்கப்படுவதும், உடைக்கப் படுவதும் தொடர்ந்து கொண்டே தானிருக்கும்.
கண்டனப் போராட்டத்தை கழகத்தால் நடத்த முடியாதா?
காவல்துறை தன் கடமையைச் செய்யும் என்று எதிர் பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்தான் விஞ்சியிருக்கிறது. இதனை எதிர்த்து திராவிடர் கழகம் கடும் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது ஒன்றும் இயலாத காரியமல்ல; ஒரு 24 மணி நேரத்தில் இதனைச் செய்து விட முடியும். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழர்கள் ஒன்று திரண்டு எழுவார்கள்!
நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற் படுத்தக் கூடும் என்பதாலும், அரசும், காவல்துறையும் தந்தை பெரியார் விஷயத்தில் உரிய கடமையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்த்ததாலும் பொறு மையைக் கடைப்பிடித்தோம்.
இனிமேலும் பொறுமை காட்ட இயலாது
தொடர்ந்து தந்தை பெரியார் சிலை அவமதிக் கப்படுவதால், இனிமேலும் திராவிடர் கழகம் பொறுமை காப்பது அர்த்தமற்றதாகி விடும். ஒரு சில நாள்களில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜாவைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தா விட்டால், அடுத்த கட்ட பணியில் அனைத்துக் கட்சியினரையும் ஒருங்கிணைத்து திராவிடர் கழகம் உரிய வகையில் அறப்போராட்டத்தில் ஈடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.