உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றாவிட்டால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என கர்நாடக அரசை உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி இதுதொடர்பான வழக்கை விசாரித்தபோது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு உத்தரவிட்டு, அதற்காக ஆறு வாரங்கள் அவகாசமும் வழங்கியிருந்தது. ஆனால், மத்திய அரசு ஸ்கீம் உள்ளிட்ட காரணங்களை மேற்கோள்காட்டி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. அதையடுத்து, மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவுத்திட்டத்தை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், இன்று இதுதொடர்பான வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்திற்கு 4 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடக அரசு தரப்பு மறுப்பு தெரிவித்த நிலையில், 4 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட முடியுமா? முடியாது? நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றாவிட்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக்கூறி வழக்கை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.