இலங்கை தமிழர் பிரச்னையின் போது திமுக எம்பிக்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேரில் சென்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக குழு முதலமைச்சர் தலைமையில் பிரதமரை சந்திக்க அனுமதி கோரப்பட்டது. அதற்கு முதலில் நீங்கள் வேண்டுமானால் அந்த துறையின் அமைச்சர்களை சந்தியுங்கள் என பிரதமர் தரப்பில் பதில் தரப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையாக இருக்கும் இந்த சூழ்நிலையில் தமிழக குழுவை பிரதமர் சந்திக்க மறுப்பது வேதனையளிக்கிறது. பிரதமர் சந்திக்க மறுத்தால், திமுக, அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வோம் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று இதுகுறித்து சென்னை அயனாவரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,
உள்ளே ஒன்று பேசிவிட்டு வெளியே மற்றொன்று பேசுவது நாகரீகமல்ல. முதலில் துறை அமைச்சர் கட்காரியை சந்தியுங்கள் என்று தான் கூறப்பட்டது. பிரதமர் சந்திக்க மறுப்பதாக நாங்கள் சொல்லாத வார்த்தையை ஸ்டாலின் சொல்லக்கூடாது.
லோக்சபாவில் திமுகவுக்கு ஒரு எம்பி கூட இல்லாத நிலையில் அதிமுகவை ராஜினாமா செய்ய சொல்வது சுலபம். இலங்கை தமிழர் பிரச்னையின் போது திமுக எம்பிக்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை. மத்திய அரசில் அங்கம் வகித்து காவடி தூக்கிய திமுக செய்தது என்ன?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்ற இரு அவையிலும் அதிமுக எம்பிக்கள் அழுத்தம் தருவார்கள். தமிழகத்தின் உரிமையை காக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.