மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்திற்கும் எங்களுடைய ஆதரவு கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மக்களோடு எப்போதும் இருக்கும் நாங்கள் தூத்துக்குடி மக்களை நிச்சயம் சந்திப்போம். தனி தமிழ்நாடு என்ற ஒரு சொல்லை வைகோ கூறியிருந்தால், இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு என சொல்லும் போது அதுகுறித்து மத்திய அரசு தான் அந்த விஷயங்களை எடுத்துக்கொள்ளும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் கவலைக்கொள்ளத்தக்க, ஒரு துரதிர்ஷ்டவசமான, அரசு வேதனைப்படக்கூடிய விஷயமாகும். இந்த நேரத்தில் அங்கு அமைதி திரும்பி எல்லா மக்களும் சகோதரர்கள், எல்லோரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்தநிலையில் ஆக்கப்பூர்வமான யோசனைகள் செய்து எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொள்வது தான் ஒரு எதிர்கட்சித் தலைவரின் பண்பாடாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் எதிரிக்கட்சித்தலைவராக இருக்கக்கூடாது.
ஸ்டெர்லைட் ஆலை திறக்கக்கூடாது என்பது தான் அரசின் நிலைப்பாடு. ஸ்டெர்லைட்க்கு கொடுக்கப்பட்ட மின்சாரம் மாசுகட்டுப்பாடு உத்தரவின் பேரில் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மக்களின் உணர்வு தான் எங்களின் உணர்வு. மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்திற்கும் எங்களுடைய ஆதரவு கிடையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.