ராகுல்காந்தியை பிரதமராக பார்க்க ஆசைப்படுகிறேன் என அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானியின் உதவியாளராக பணியாற்றியவர் சுதீந்திர குல்கர்னி. சி.பி.எம். கட்சியில் இருந்த இவர், பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, அக்கட்சி சார்பில் முதன்முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட வாஜ்பாய் மற்றும் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானியின் ஆலோசகராகவும், அவர்களது உரைகளை தயார் செய்பவராகவும் செயல்பட்டு வந்தார். பின்னர் சில கருத்து வேறுபாடுகளால் அவர் 2009ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற விழாவொன்றில் கலந்துகொண்ட சுதீந்திர குல்கர்னி, ‘பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண பிரதமர் மோடி தவறிவிட்டார். பேச்சு வார்த்தையின் மூலமாக மட்டுமே இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயலும். அவ்வாறு இந்த பிரச்சனைகளை சரிசெய்வதன் மூலம், இந்தியா சிறந்த நாடாக திகழும். இந்த பிரச்சனைகளை தீர்க்க நமக்கு என்ன தேவை என்பதை முதலில் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். நமக்கு ஒரு சிறந்த தலைவர் தேவைப்படுகிறார். எனவே, வருங்காலத்தில் ராகுல்காந்தியை பிரதமராக பார்க்க ஆசைப்படுகிறேன். 2019ஆம் ஆண்டுக்குள் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அவர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணவேண்டும்; ராஜீவ்காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இதையே செய்தார்’ என தெரிவித்தார்.
மேலும், ராகுல்காந்தி ஒரு இளைஞர் மட்டுமின்றி, அவர் ஒரு சிந்தாந்தவாதி. அவரைப் போல அன்பு, பாசம் மற்றும் இரக்க குணம் கொண்ட அரசியல் தலைவர்களை சமகாலத்தில் பார்க்க முடியாது. எனவே, ராகுல்காந்தி ஒரு பெரிய தலைவராக தன்னை வளர்த்துக்கொண்டு, மோடி தவறவிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும்’ எனவும் பேசியுள்ளார்.