தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (06/04/2021) காலை 07.00 மணியளவில் தொடங்கிய நிலையில், அமைதியான முறையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இரவு 7 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிகாரிகள் எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், வேளச்சேரியில் (நந்தினி மருத்துவமனை அருகில்) 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை பைக்கில் தூக்கிச் சென்ற நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அவரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்றியதாகப் புகார் எழுந்த நேரத்தில், இச்சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பந்தப்பட்ட நபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு விசாரித்து வருகின்றனர். இதனால், வேளச்சேரியில் மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டும் என வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா வலியுறுத்தியுள்ளார்.