![www](http://image.nakkheeran.in/cdn/farfuture/_Xrr9dm9Gzb7iNbx-SpDYf_4kxlsoHG7-_oBD8Zs-Ew/1598943187/sites/default/files/inline-images/603_39.jpg)
பொதுவாக அரசு அதிகாரிகள் பொதுமக்களை அணுகும் விதம் நாம் அறிந்ததே. தங்களது அதிகாரத்தை காண்பித்து மரியாதை இல்லாமல் பேசுவதும், அதுவும் படிக்காத ஏழை எளிய மக்கள், கிராமப் பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் ஏதாவது கோரிக்கையுடன் சென்றால் அவர்களுக்கு அதிகாரிகள் கொடுக்கும் மரியாதை எப்படி இருக்கும் என்பதும் நமக்கு தெரியும்.
கரோனா காலக்கட்டத்தில் இ.பாஸ் முதல் கரோனா சிகிச்சை வரை அதிகாரம், செல்வாக்கு உள்ளவர்களுக்கு கிடைத்தது, ஏழை எளியோருக்கு கிடைக்கவில்லை என்பது நாம் கண்கூடாக அறிந்ததே. இ.பாஸ் பிரச்சனையில் ஒரு மருத்துவருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம், கைகலப்பு நடந்தது. அரசு அதிகாரிகளுக்கு அது எளிமையாக கிடைக்கிறது. அதிகாரம் கையில் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் நாம் பார்த்த இன்னொரு சம்பவம் சாத்தான்குளம் சம்பவம்.
காவல்துறையினரும் அதிகாரம் படைத்தவர்கள். மக்களின் அத்தியாசியத் தேவைகளை நிறைவேற்றக்கூடிய இடத்தில் இருக்கும் அதிகாரிகளும் அதிகாரம் படைத்தவர்கள்தான். இந்த வகையில் லேட்டஸ்டாக காவல்துறையினருக்கும் மின்சாரத்துறையினருக்கும் அதிகாரப் போட்டி நடந்திருக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள கூமாபட்டி காவல்நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மின்வாரிய ஊழியர் சைமன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் இரண்டு பேரை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். இதனை பார்த்த போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.‘ஒரு வாகனத்தில் மூன்று பேர் போகலாமா?’ எனக் கேட்டுள்ளனர்.
அப்போது சைமன் தரப்பு “நீங்க மட்டும் டிரங்கன் டிரைவ் கேஸ் போட்டு ஜி.எச்.சுக்கு கூட்டிட்டு போறப்ப ட்ரிபிள்ஸ்தானே போறீங்க? போலீசுக்கு மட்டும் தனிச்சட்டமா?” என்று பதிலுக்கு கேட்டுள்ளனர். இதனால் எரிச்சலான போலீசார், சைமனின் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து, கூமாபட்டி காவல் நிலையத்துக்கு கொண்டு போய்விட்டனர்.
சைமனின் இருசக்கர வாகனத்தை போலீசார் பறித்த சம்பவம் மின்வாரிய ஊழியர்களுக்கு பரவியது. போலீஸ் பவரை எங்ககிட்டயே காட்டுறீங்களா?’ என்று கடுப்பான மின்வாரிய ஊழியர்கள், இதனை மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளனர். உயரதிகாரி ஒருவரின் ஒத்துழைப்போடு, கூமாபட்டி காவல்நிலையத்தின் மின் இணைப்பை துண்டித்தனர். அதனால், காவல்நிலையப் பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், கூமாபட்டி காவல்துறையினர், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டுள்ளனர். அதன்பிறகு, இரண்டு மணி நேரம் கழித்தே, காவல்நிலையத்துக்கு மின் இணைப்பு தந்துள்ளனர்.
ஒரு சிலரை தவிர பொதுவாக காவல்துறையில் இருப்பவர்கள் பொதுமக்களை எவ்வாறு நடத்துவார்கள் என்பது நமக்கு தெரியும். அதேபோல மின்சாரத்துறை ஊழியர்கள் எவ்வாறு அணுகுவார்கள் என்பதும் தெரியும். ஒரு வேலைக்காக நாம் சென்றால் காக்க வைப்பதும், சின்ன சின்ன வேலைகளுக்கு பணம் கேட்பதும் தெரிந்ததுதான். இப்போது இவர்கள் இருவருக்குள்ளும் மோதல் நடந்ததால், அதிகாரம் கையில் இருப்பதால் ஒருவருக்கொருவர் நீயா, நானா என எகிறியிருக்கின்றனர். தங்களுக்கு ஒரு அவமதிப்பு என்றவுடன் தங்கள் கையில் இருக்கும் அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தும் இவர்கள் பொதுமக்களுக்கு என்றால் தக்காளி சட்னியைப் போலவும், இவர்களுக்கு வந்தால் ரத்தம் போலவும் நடந்து கொள்கின்றனர்.