இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. பெற்றோர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்கள் எனப் பலரும் இந்த வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என மத்திய அரசு விளக்கமளித்தது. அதோடு நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கும் மறுப்பு தெரிவித்தது. அதே சமயம் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஒரு மையத்தில் நடைபெற்ற தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி பயிற்சி மையத்தின் தலைவர் உட்பட 5 பேரைக் குஜராத் போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்படியான பரபரப்பான சூழ்நிலையில், தற்போது நீட் தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “உச்சநீதிமன்றம் உத்தரவின்படி 1,563 தேர்வர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு நடத்தியதில் இரண்டு இடங்களில் முறைகேடுகள் நடந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உறுதியளிக்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெரிய அதிகாரிகள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டாலும், அவர்கள் தப்பிக்க முடியாது. இது குறித்து அரசு கவலை கொண்டுள்ளது. எந்த குற்றவாளியும் தப்ப முடியாது. அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்” என்று கூறினார்.