ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் பொறியியல் படிக்கவே தகுதியில்லாதவர்கள் என உயர்கல்விச் செயலர் சுனில் பலிவால் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட உயர்கல்வித்துறை செயலர் சுனில் பலிவால், ‘தமிழகத்தில் கடந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் முறை ஆன்லைனுக்கு மாற்றப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், முந்தைய ஆண்டைவிட 25ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவாகவே வந்தன. இந்நிலையில், பழைய முறைக்கே விண்ணப்பிக்கும் முறையைக் கொண்டுவாருங்கள் என்று கல்லூரிகளின் சார்பில் கோரப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் பொறியியல் படிக்கவே தகுதியில்லாதவர்கள் என்றுதான் நான் சொல்வேன்’ எனக் கூறினார்.
தமிழகத்தில் இன்னமும் முதல் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையிலும், கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களின் எதிர்காலம் கருதியும் சிந்திக்காமல், அவர்களைத் தரக்குறைவாக மதிப்பிடுவது தவறான போக்கு என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.