
புதிய கல்விக் கொள்கை குறித்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்பொழுது தலைமை செயலகம் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்ட நிலையில், புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்விமுறை இடம்பெற்றிருப்பது வேதனையை அளித்திருக்கிறது என வருத்தம் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது எனவும் இருமொழிக் கொள்கை மட்டுமே தமிழ்நாட்டில் தொடர்ந்து பின்பற்றப்படும். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்த ஆலோசனை கூட்டத்தில் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு முழு எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. தோழமை கட்சிகள் முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.