மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி, டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது குறித்து ஒரு கோடி பெண்களிடம் கருத்து கேட்க திட்டமிட்டுள்ளார். தொலைபேசி வழியாக 0120 6844260 என்ற எண்ணில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு அழைப்பு போகும். டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை ஆதரிக்கிறீர்களா என்று அந்த அழைப்பில் கேட்கப்படும். அதற்கு ஆம் அல்லது இல்லை என்று பதில் சொன்னால் போதும். தமிழக பெண்களின் மதிப்புமிக்க கருத்துகளை தமிழக முதலமைச்சரிடம் மக்கள் பிரதிநிதியாக கொடுக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மே 6ஆம் தேதி 4 மணி நிலவரப்படி, தொலைபேசி வாயிலாக தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ள 30 லட்சம் பெண்களில் 90% பேர் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளதாக தெரிவித்த ஜோதிமணி, இது தவிர change.org வழியாக தமிழக முதல்வருக்கு மதுக்கடைகளை திறக்கவேண்டாம் என்று கேட்டு மனு அனுப்பும் போராட்டத்தையும் முன்னெடுத்து வருகிறார்.