2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான ஒரு அணி, அதிமுக தலைமையிலான ஒரு அணி போட்டியிட்டன. மேலும், நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. அமமுக தலைமையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், மக்கள் நீதி மய்யம் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே. போன்ற கட்சிகள் போட்டியிட்டன. ஐந்து முனை போட்டியால் வாக்குகள் பிரியும், அது அதிமுக கூட்டணிக்கும் அதில் உள்ள பாஜகவுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று டெல்லி நினைத்தது.
தேர்தலுக்குப் பிறகும் டெல்லியின் கவனம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் மீது தொடர்கிறது.
இதுகுறித்து விசாரித்தபோது, தமிழக தேர்தலுக்குப் பிறகும் மத்திய அரசு கமல், சீமான், தினகரன் ஆகியோர் மீது கவனம் செலுத்தி வருகிறது. இவர்கள் மூவரும் தேர்தலில் பிரித்த வாக்குகள் யாருக்குச் சாதகம்? யாருக்குப் பாதகம்? என்று சர்வே ஒன்றை எடுத்துத் தருமாறு மத்திய உளவுத்துறையிடம் கேட்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா.
அதன்படி, இரு நாட்களுக்கு முன்பு அதன் ரிப்போர்ட்டை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறது புலனாய்வு அமைப்பு. கமலும், சீமானும் பிரிக்கும் வாக்குகளில் பெருமளவு திமுகவுக்குத்தான் பாதகம் என்றும், தினகரனின் அமமுக பிரிக்கும் வாக்குகளால் முழுமையாக அதிமுகவுக்குப் பாதிப்பு என்றும் ரிப்போர்ட் போயிருப்பதாக கூறப்படுகிறது.