மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடைச்செய்ய வேண்டுமெனக்கேட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார் தென்னிந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அய்யாக்கண்ணு. 75வது நாளான இன்று ( 14.5.18 ) வேலூர் மாநகருக்கு வந்தார். வந்தவர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளிக்க ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர்.
சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தினர் அதன் பொதுச்செயலாளர் ராஜகோபால் தலைமையில் இன்று காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து அங்கு நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் கலெக்டரிடம் மனு தந்தனர். அந்த மனுவில், தமிழகம் முழுவதும் இந்துக்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது, அந்த தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துயிருந்தனர். அந்த மனுவை அளித்துவிட்டு வெளியே வந்தனர்.
மனுவளிக்க காத்திருந்த அய்யாக்கண்ணுவை பார்த்து கோபமான சக்திசேனா ராஜகோபால், பிரதமர் மோடியை விமர்சனம் செய்யும் அய்யக்கண்ணு ஒழிக என கோஷமிட்டார். கோஷமிட்டதோடு அய்யக்கண்ணுவை கொச்சைப்படுத்தி, மோசமாக பேசினர். இதைப்பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நான் பிரதமரை எங்கும் மோசமாக பேசவில்லையே, பிறகு ஏன் என்னை மோசமாக பேசுகிறீர்கள் என அய்யாக்கண்ணு கோஷமிட்டவர்களை நோக்கி கேள்வி எழுப்பினர். கேள்வி கேட்டதால் கோபமான சக்திசேனா அமைப்பினர் அய்யாக்கண்ணுவிடம், எங்களையா கேள்வி கேட்கற என வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் ஒருக்கட்டத்தில் தள்ளுமுள்ளுவானது. இருதரப்பும் பிடித்து தள்ளிக்கொண்டனர். பிரதமரை பற்றி இனிமேல் எங்காவது பேசினால் அவ்வளவு தான் என அய்யாக்கண்ணுவை தாக்கவும் முயன்றனர். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலிஸார் இருதரப்பினரையும் விலக்கிவிட்டு இந்து அமைப்பினரிடமிருந்து அய்யக்காண்ணுவை பாதுகாத்தனர். இருதரப்பையும் விலகிச்செல்ல அறிவுறுத்தி கலைந்து செல்லவைத்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டவும், விவசாயத்தை பாதுகாக்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையோடு ஆட்சியரை சந்திக்க முயன்றேன். அங்கு வந்து வீணாக பிரச்சனையில் இந்து அமைப்பினர் ஈடுப்பட்டனர், இதனை காவல்துறை வேடிக்கை பார்த்தது. இதுபற்றி டீ.ஜி.பியிடம் முறையிடவுள்ளேன் என்றவர் காவிரி விவகாரம் தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.
சக்திசேனா ராஜகோபாலோ, அய்யாக்கண்ணு போராட்டம் சரி, ஆனால் பிரதமர் மோடியை விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் வாக்குவாதம் செய்தோம் என்றார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலேயே விவசாய சங்க தலைவர் மீது இந்து அமைப்பினர் தாக்க முயன்றது அங்கிருந்த பொதுமக்களை அதிர்ச்சியடையவைத்தது.