இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் ( NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். அந்த வகையில் தமிழ் உட்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. வரும் ஜூன்14 ஆம் தேதி இதற்கான முடிவுகள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில்தான் மும்பையில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாணவர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்ட நிலையில் ஆள்மாறாட்டம் நடந்ததும் அம்பலமாகி இருந்தது. நீட் தேர்வு வினாத்தாள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை ஆனதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருந்தது. ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் என நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த முறைகேடு சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜூன் 14ஆம் தேதி இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த பரபரப்பான நேரத்தில் சத்தமே இல்லாமல் நீட் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 67 பேர் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்ததாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. பெற்றோர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்கள் எனப் பலரும் இந்த வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையே நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என மத்திய அரசு விளக்கமளித்து வருகிறது.
இந்த நிலையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று (18-06-24) உச்சநீதிமன்றத்துக்கு வந்தது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘நீட் தேர்வு விவகாரத்தில் யாராவது ஒருவர் அதாவது 0.001% அலட்சியமாக இருந்தாலும் அதை முழுமையாக ஆராய வேண்டும். தனிநபர் ஒட்டுமொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறும் சூழலை யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற குழந்தைகள் கடினமாக படிக்கின்றனர் என்பதை யோசித்துப் பாருங்கள். மோசடி செய்த ஒருவர் மருத்துவராக மாறுவதை கற்பனை செய்து பாருங்கள்’ என கருத்து தெரிவித்து இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது, மேலும், வினாத்தாள் கசிவு, முறைகேடு வழக்கின் விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.