Skip to main content

தமிழ்நாட்டு பாரம்பரியத்தின் மன்னர் அடையாளம்: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மறைவுக்கு கருணாஸ் இரங்கல்!

Published on 25/05/2020 | Edited on 25/05/2020

 

singampatti zamin Murugadoss Theerthapathy

a
தமிழ்நாட்டின் கடைசி ராஜா நமது சிங்கம்பட்டி ஜமீன் முரு­கதாஸ் தீர்த்தபதி மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். தென் இந்தியாவில் எஞ்சியிருந்த பட்டம் கட்டிய ஒரே ராஜாவாகக் கருதப்பட்டவர் சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள்தான்.
 


முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் சிறந்த டென்னிஸ் விளையாட்டு வீரர். பலே நடனத்தில் புகழ் பெற்றவர். தந்தை இறந்ததை அடுத்து மூன்றரை வயதில் இவருக்கு முடிசூட்டப்பட்டது. அக்கால சம்பிரதாயப்படி முடி சூட்டப்பட்டவர் இறந்தவர்களைப் பார்க்கக் கூடாது அதனால் தந்தையார் இறந்ததும் அவரது உடலைக் கூட இவர் பார்க்கவில்லை. 

முடிசூட்டப்படுபவர்களுக்கு ஆயக் கலைகள் அறுபத்து நான்கும் கற்பிக்கப்படுவதுண்டு. ஆனால் இவருக்கு அப்படி எந்தப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை. ஆனால் இவர் சுயமாகவே குறி பார்த்துச் சுடுதல், ரக்பி, போலே நடனம், உதைப்பந்தாட்டம். சிலம்பு, வாள் வீச்சு என்று பல துறைகளிலும் கற்றுக் கொண்டு அதில் சிறந்து விளங்கியுள்ளார். 
 

மழையில்லாத ஊருக்கு அரசர்கள் சென்றால் மழை பெய்யும் என்பது சம்பிரதாயம் மட்டுமல்ல மக்களின் நம்பிக்கையும் கூட. அதனால் அதே போல 1984 ஆம் ஆண்டு மழையே காணாத மாஞ்சோலை ஊருக்கு இவரை அழைத்துச் சென்றதால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி, அந்தக் கிராம மக்கள் நன்றிக்கடனாக எனக்கு துலாபார மரியாதை செய்தனர் என்று ஒரு முறை அவர் தனது நேர்காணலில் கூறினார்! 
 

ஒரு அரசருக்கு சிங்கத்தின் பெருந்தன்மையும் யானையின் வலிமையும் வேண்டும் என்பார்கள். அதன் அடிப்படையிலேயே  நமது ஜமீனுக்கு சிங்கப்பட்டி ஜமீன் என்று பெயர் சூட்டப்பட்டது. 
 


1952-ஆம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரை மேற்குத் தொடர்ச்சி மலையில் 74,000 ஏக்கர் நிலங்கள் ஜமீன் ஆளுகையில் இருந்து வந்தது. மேலும், சிங்கம்பட்டி ஜமீன் ஆளுகையில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில், அகமகாதேவர் கோயில், முத்தாரம்மன் கோயில், வல்லப கணபதி கோயில், வெயில் உகந்த அம்மன் கோயில், முப்புடாதி அம்மன் கோயில், சுப்பிரமணியசாமி கோயில், ஊத்துக்குளி சாஸ்தா ஆகிய 8 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு முருகதாஸ் தீர்த்தபதி பரம்பரை அறங்காவலராக இருந்து நிர்வகித்து வந்தார். 

காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி பக்தர்களுக்கு ராஜ உடையில் காட்சியளிப்பார். தொடர்ந்து 74 வருடங்களாக சொரிமுத்து அய்யனார் கோயிலில் இவர் ராஜஉடையில் காட்சி அளித்துள்ளார். 
 

சிங்கம்பட்டி ஜமீன், பிரிட்டிஷ் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 ஆயிரம் கிஸ்தி செலுத்தி வந்துள்ளனர். இன்று சிங்கம்பட்டி ஜமீன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகத்தான் அறியப்படுகிறது. ஆனால் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அது 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு ஜமீன். தனி நபரால் வரி வசூல் செய்யப்பட்டு, ஆட்சி செய்யப்பட்டு, ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம். 
 

சிங்கம்பட்டி ஜமீன் அதிக வனப்பகுதியைக் கொண்ட பகுதி. சிங்கம்பட்டி ஜமீனுக்கு 1,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு. சிங்கம்பட்டி ஜமீன் மறவர்கள் பாண்டியர்களின் வழித் தோன்றல்கள் என்றும் நாயக்கர் காலத்தில் சிங்கம்பட்டி பாளையமாக மாறியது என்றும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அது ஜமீனாக மாறியது என்றும் சொல்லப்படுகிறது. 
 

http://onelink.to/nknapp

 

இவ்வளவு பெருமை வாய்ந்த நமது சிங்கம்பட்டி ஜமீன் அவர்கள் மறைவு என்பது நமக்கு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இவ்வாறு கருணாஸ் கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்