தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளைத் திறந்ததாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கோவில்பட்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பென்னிக்ஸ் திங்கள்கிழமை இரவும், அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த சம்பவத்திற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் இரண்டு எஸ்.ஐ.-கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பணியிடை நீக்கம் போதாது, சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்குக் கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட காவல்துறை சட்ட மருத்துவ ஆலோசகர் அலுவலகம் மற்றும் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை அலுவலகத்தில் கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் அவர்கள் முன்னிலையில் சாட்சியங்கள் விசாரணை தொடங்கி இருக்கிறது.
இதில் உயிரிழந்த தந்தை மகன் சார்பாக ஜெயராஜ் அவர்களின் மனைவி செல்வராணி மற்றும் அவரது மூன்று மகள்கள் பெர்சி, பியூலா, அபிஷா ஆகியோர் தங்கள் தரப்பு கோரிக்கைகள் மற்றும் சாட்சியங்களைத் தெரிவிக்கின்றனர்.