இரண்டு மான்களை வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1998ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஹம் சாத் சாத் ஹெய்ன் என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சயிஃப் அலி கான், தபு, சோனாலி பிந்த்ரே மற்றும் நீலம் ஆகியோர் இரண்டு கருப்பு பக் வகை மான்களை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஜோத்பூர் நீதிமன்றத்தில் கடந்த பல வருடங்களாக நடைபெற்று வந்தன. கடைசியாக மார்ச் 28ஆம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, ஏப்ரல் 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை குற்றம்சாட்டப்பட்ட நடிகர், நடிகைகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இந்நிலையில், இரண்டு மான்களை சுட்டுக்கொன்ற விவகாரத்தில் நடிகர் சல்மான் கான் மட்டுமே குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேபோல், மற்ற நால்வரும் விடுதலை செய்யப்படுவதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பில் சல்மான் கானுக்கு வழங்கப்படும் தண்டனை விவரங்கள் முதலில் குறிப்பிடப்படவில்லை. நீதிபதி சல்மான் கான் மற்றும் எதிர் தரப்பினருக்கு ஒரு மணிநேரம் கால அவகாசம் கொடுத்திருந்தார். இந்த நேரத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான சிறை தண்டனை வழங்குமாறு சல்மான் கான் தரப்பில் இருந்து கோரப்பட்டது. அதன்படி, தற்போது ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், இன்றே சல்மான் கான் ஜாமீனில் வெளிவருவதற்கான மனுவை அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழங்குவார்கள் என தெரிகிறது.