
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த கடுமையான பிரயாசைகளை மேற்கொள்கிறார் முதல்வர் பினராய் விஜயன். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அப்பட்டமாகவே மீறும் பரிவார் அமைப்புகள் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என கடும் ஆட்சேபம் செய்வதோடு, ஆர்ப்பாட்டம் , போராட்டங்கள் நடத்தியதில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவல் துறை தடியடிப் போராட்டம் நடத்தியதில் தனியார் மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதமடைந்தன.

ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஐந்தாயிரம் பேர்கள் கைது செய்யப்பட்டார்கள். வெளியே வர ஜாமீன் கிடைக்க முடியாத பிரிவில் ஜெயிலில் இருப்பவர்களின் எண்ணிக்கை 256.
ஆனால், சபரிமலை சன்னிதானத்திற்குள் போலீசாரின் நடவடிக்கை காரணமாக கலவரம் ஏற்படக் கூடாது. மோதலில் எந்த ஒரு உயிரிழப்பும் கூடாது அப்படி நடந்தால் விவகாரம் திசை திருப்பப்பட்டு ஆகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து விடும் என்பதால் அதற்கு இடமளிக்காமல் கவனமாகச் செயல்படுகிறார் முதல்வர் பினராய் விஜயன் என்கிறார்கள். அதற்கு ஏற்ப சபரிமலை செல்வதற்கு வருகிற இளம் பெண்களை பாதுகாப்புடன் ஆலயம் கொண்டு செல்கின்றனர். அது சமயம் சன்னிதானத்திலிருக்கும் அமைப்புகள் அவர்களை மேலே செல்லவிடாமல் கடுமையாக தடுக்கிறார்கள். அவர்களை எதிர்த்து மேல் நடவடிக்கையை மேற்கொள்ளாமல் காரணத்தைத் தெரியப்படுத்தி பெண்களைத் திருப்பி அனுப்பிவிடுகிறது போலீஸ். இதன் காரணமாக அங்கு பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே தங்களின் எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தவும் பெண்கள் சபரிமலைக்குச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நேற்றைய தினம் கேரளாவில் இந்து அமைப்புகள் பெண்களடங்கிய ஜோதி போராட்டத்தை நடத்தினார்கள். இந்தப் போராட்டம் கேரளா, குமரி, பெங்களூரூ, டெல்லி கோன்ற நகரங்களிலும் நடந்தது.

இதற்கு பதிலடியாக பினராய் விஜயனின் சி.பி.எம். அரசு, பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வலியுறுத்தி இந்து மதத்தைச் சேர்ந்த சாதி மற்றும் சமுதாய அமைப்பினரைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். கூட்டத்தில் பெண்கள் விழிப்புணர்வு பொருட்டு ஜனவரி 1ம் தேதி பெண்கள் மனிதச்சுவர் போராட்டத்தை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாயர் சமூகத்தின் என்.எஸ்.எஸ். அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

கேரள அரசின் போர்வையில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்துகிறது என குற்றம் சாட்டுகிறது. அதற்கு அரசுப் பணம் செலவிடப்படுகிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்து நீதிமன்றம் வரை செல்ல பினராய் விஜயனோ அரசுப் பணம் செலவிடப்படவில்லை என் விளக்கம் அளித்துள்ளார். அரசு ஆதரவோடு நடத்தப்படும் பெண்களை மட்டுமே கொண்ட இந்த மனிதச்சுவர் போராட்டம் மிகப் பெரியதாக இருக்கும். வரலாற்றுப் பதிவாகிப் பேச்சாகிவிடும் என்ற காரணத்தால், சபரிமலைப் போராட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

காரணம், பல ஆண்டுகட்கு முன்பு இந்தியாவிலேயே வேறு எங்கும் காணப்படாத அளவில் கேரளாவில் மிக நீண்ட 650 கி.மீட்டர் தூரத்திற்கு மனித சங்கிலிப் போராட்டத்தை கேரளாவின் வட எல்லையான காசர் கோட்டிலிருந்து திருவனந்தபுரம் பாறசாலை வரை வெற்றியுடன் நடத்திக் காட்டினர் மார்க்சிஸ்ட் கட்சியினர். அதில் பல லட்சம் பேர்கள் கலந்து கொண்டார்கள். இது போன்று வேறு எந்தக் கட்சியும் நடத்தவில்லை.
இந்த விஷயம் தான் சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக்காரர்களை பதற்றத்திற்குள் கொண்டு சென்றிருக்கிறது.